மதுரையிலிருந்து துணிவோடு வந்தார். கடைசிவரை துணிவோடு வாழ்ந்து மறைந்தார்.
மதுரையிலிருந்து எளிமையாக வந்தார். கடைசிவரை எளிமையாகவே வாழ்ந்து மறைந்தார்.
மதுரையிலிருந்து இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தார். கடைசி வரை உதவிக்கொண்டே வாழ்ந்து மறைந்தார்.
ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இரங்கல் செய்தியில் பொதுவாகச் சொல்வார்கள்.
விஜயகாந்த் அவர்களின் மரணம்... உண்மையி லேயே ஈடு செய்ய முடியாத இழப்புதான்.
தமிழர்களின் மனங்களில் இருந்தவர், இன்று தமிழ் மண்ணில் இல்லை... மறைந்து விட்டார்!
"சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் புகழின் வெளிச்சத் துக்கு வந்தார். அந்த வெளிச்சத்தில் அவரோடு இருந்து ஒளி பெற்றவன் நான்.
கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தான் என்று சொல்வார்கள். விஜயகாந்த் அவர்களும் அப்படித்தான்... பிறக்கும்போதே கருணை உள்ளத்தோடு பிறந்தவர். எல்லோரையும் நேசித்தவர் என்றாலும்கூட அவரது இதயத்தில் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இடம் இருந்தது. அவரது வாழ்க்கையில் இப்ராகிம் ராவுத்தருக்கும், எனக்கும் ஆழமான இடம் மட்டுமல்ல... அசைக்க முடியாத இடம் எப்போதுமே இருக்கும். என்மீது அவர் வைத்திருந்த அன்புக்கு எல்லையே இல்லை. அந்த அன்புக்குரியவர் இன்று உயிரோடு இல்லை. என்னால் மட்டுமல்ல... எவராலும் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்திவிட்டது அவரது இழப்பு.
மரணம் எல்லோருக்கும் வந்துதான் தீரும். ஆனால் நல்லவர்களுக்கு ஏன் இவ்வளவு விரைவில் வரவேண் டும். அவர் மரணச் செய்தி வந்ததிலிருந்து எனது அலைபேசி யில் அழைப்புகள் இடைவிடாது வந்துகொண்டேயிருக்கின் றன. மறுமுனையில் பேசுபவர்கள் எல்லோரும் மனமுடைந்து கதறி அழுகிறார்கள். அவருடன் பழகியவர்களும் அழு கிறார்கள். அவரை திரையில் பார்த்தவர்களும் அழுகிறார்கள்.
எனக்கும் அவருக்கும் உள்ள நெருக்கமான நட்பு பற்றி தெரிந்தவர்கள் என்னிடம் துக்கத்தைப் பகிர்ந்துகொள் கிறார்கள். உடன்பிறந்த சகோதரர்களை விட என்னை உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்தவர்... கடைசிக் காலத் தில் அவரை விட்டுப் பிரிந்திருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.
அவர் மதுரையிலிருந்து வந்தபோதே "மதுரை வீரனின்' வெறித்தனமான ரசிகராக இருந்தார். "எம்.ஜி.ஆர்.' என்ற மூன்றெழுத்து அவரது மூச்சில் கலந்திருந்தது. "கலைஞர்' என்ற நான்கெழுத்து அவரது நாடி நரம்பெல்லாம் நிறைந்திருந்தது. தர்மத்தில் எம்.ஜி.ஆராக இருந்தார். தமிழை நேசிப்பதில் கலைஞராக இருந்தார். இருவரும் சேர்ந்த கலவையாக விஜய காந்த் இருந்தார். அதனால் அவருக்கு "புரட்சிக் கலைஞர்' என்ற பட்டத்தை அண்ணன் கலைப்புலி தாணு வழங்கினார்.
பல திரைப்படங்களில் நான் அவருக்காக எழுதினேன். அந்த வசனங்களையெல்லாம் அவர் மக்களுக்காகப் பேசினார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தையும், அரசியல் ஆர்வத்தையும் தூண்டியவர்களில் எனக்கு அதிகமான பங்கிருக்கிறது.
அவர் தந்தை பெரியாரையும் நேசித்தார், அண்ணல் அம்பேத்கரையும் நேசித்தார், பசும்பொன் தேவரய்யாவையும் நேசித்தார், கர்மவீரர் காமராஜரையும் நேசித்தார், பேரறிஞர் அண்ணாவையும் நேசித்தார், தமிழினத் தலைவர் கலைஞரையும் நேசித்தார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் நேசித்தார், புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் நேசித்தார்.
ஒவ்வொரு தலைவரிடமிருக்கும் சிறந்த குணங்களை எடுத்துக்கொணடு தனித்துவமிக்க தலைவராக அவர் ஆகவேண்டும் என்று நினைத்தோம். இயல்பாகவே அவரும் அப்படித்தான் இருந்தார். அப்படி ஒரு தலைவரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை... பார்த்திருப்பார்கள், ஆனால் அதற்குள் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது.
புதிய தமிழ்நாட்டை, புரட்சிகரமான தமிழ்நாட்டை, தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை, தலைசிறந்த தமிழ்நாட்டை உருவாக்கும் முதலமைச்சராக அவர் ஆகவேண்டும் என்பதற்காக விதை போட்ட கரங்கள் என்னுடையது.
என் கனவுகள் மட்டுமல்ல... அவர் கனவுகளும் பலிக் காமலே போய்விட்டது. அவரால் படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் ஏராளம். அவரால் வாழ்க்கையில் உயர்வு பெற்ற இளைஞர்கள் ஏராளம். அவரால் உடல்நலம் பெற்றோர் ஏராளம். அவரால் கண்ணீர் துடைக்கப் பட்ட தாய்மார்கள் ஏராளம். அவர்கள் அத்தனைபேரும் இன்று கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறார்கள்.
அவரை நம்பி, அவரை தலைவராக ஏற்றுக்கொண்டு... "கேப்டன்... கேப்டன்' என்று ஆக்ரோஷமாக அழைத்து மகிழ்ந்த லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகளின் இதயங்கள் சாய்ந்து சரிந்து போய்விட்டது. ஒரு சரித்திர சகாப்தம் முடிந்துபோய் விட்டது. ஈடு இணையில்லாத ஒரு மனிதர் இரும்பு மனம் கொண்ட ஒரு தலைவர், தன் லட்சியப் பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.
என்னை எழுத வைத்து அழகு பார்த்தவர், என் வசனங்களைப் பேசிப் பேசி தமிழர் நெஞ்சங்களில் அனல் ஏற்றியவர். அவரின் ஆன்மா அணைந்து விட்டது. நான் எப்பொழுதுமே அவரை அழைப்பது போல வழியனுப்பி வைக்கிறேன்.
""விஜிண்ணே... உங்கள் உடன்பிறவா சகோதரனான நானும் உங்களை மறக்கமாட்டேன்... இந்த நாடும் உங்களை மறக்காது. உங்கள் நினைவுகளைச் சுமந்துகொண்டே லட்சக்கணக்கான இதயங்கள் உங்கள் லட்சியங்களை நிறைவேற்ற துடித்துக் கொண்டேயிருக்கும்!''